சிங்கப்பூரில் பத்தாண்டிற்கும் மேலாக வசித்த போதிலும், எனக்குப் பேராசிரியர் ஜான் மிக்ஸிக்கைப் பற்றி கடந்த ஆண்டுதான் தெரியவந்தது. வழிகாட்டிப் பயிற்சியின் போது, அவரின் புத்தகங்கள் மற்றும் இணையக் கட்டுரைகள் மூலம் அவரது பங்களிப்பை உணர்ந்தேன். இவை அருங்காட்சியகங்களில் வருகையாளர்களுக்கு விளக்கிச் சொல்ல உதவின.
சிங்கப்பூரின் தொல்பொருள் மற்றும் வரலாற்று துறையில் பேராசிரியர் மிக்ஸிக் ஒரு முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தார். அவரது அகழ்வாராய்ச்சிகள் இந்த நிலப்பகுதிக்கும் இந்தியாவுக்கும், பரந்த தென் ஆசிய நாகரிகங்களுக்கும் இடையிலான ஆழமான தொடர்புகளை வெளிப்படுத்தின.
1984 ஆம் ஆண்டில் அவரது தலைமையின் கீழ், சிங்கப்பூர் தனது முதல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை புகிட் லாரங்கானில் (ஃபோர்ட் கேனிங் ஹில்) நடத்தியது. இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள், சிங்கப்பூரின் வரலாற்றை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளி, ஒரு செழிப்பான 14 ஆம் நூற்றாண்டு துறைமுக நகரம் என வெளிப்படுத்தின. அவரது ‘Singapore and the Silk Road of the Sea, 1300-1800’ என்ற நூலும், அவரது கட்டுரைகளும் இன்றும் வரலாற்றாசிரியர்களுக்கு இன்றியமையாத குறிப்புதவிகளாக இருக்கின்றன.
இன்று நான் காட்சிப்பொருட்களை அருங்காட்சியக வருகையாளர்களுக்கு காட்டியபோது, அவரது அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சூதுபவள மணிகள் (carnelian beads) மற்றும் உடைந்த வளையல்கள் குறித்து நான் விவாதித்துக் கொண்டிருந்தேன். சுற்றுலா முடிந்த பிறகு, என்னுடன் பணிபுரியும் ஒரு தன்னார்வலர் அவரது மறைவுச் செய்தியை எனக்குத் தெரிவித்தார். இன்று மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கும், சிங்கப்பூர் அவரது மகத்தான கண்டுபிடிப்புகளால் தொடர்ந்து பயனடையும்.
ஆழ்ந்த அமைதியில் ஓய்வெடுங்கள், பேராசிரியர் மிக்ஸிக். நீங்கள் காட்சிப்படுத்திய ஒவ்வொரு கலைப்பொருளிலும், சொல்லப்படும் ஒவ்வொரு கதையிலும், சிங்கப்பூரர்கள் தங்கள் வரலாறு 1819-ஐயும் தாண்டி நீண்டது என்பதை புரிந்துகொள்வதில் உங்கள் மரபு (legacy) வாழும்.
