நூல் அறிமுகம் | நீராம்பல் | கங்கா பாஸ்கரன்

Top post on Blogchatter

பொதுவாக கவிதைகளைப் படித்து அதைப்பற்றி பேசும் அளவிற்கு பொறுமையோ, பாண்டித்தியமோ அமையப்பெறாதவன் நான். அதன் மீது கோபம் என்றெல்லாம் இல்லை. தேவையான சிந்தனை, அதுக்கான உழைப்பு சாத்தியப்படுவதில்லை. அப்படியும் முயன்று பார்த்து ‘இப்படியாக இருக்குமோ’ என்று எண்ணப்போக, ‘அது அப்படியெல்லாம் எழுதப்பட்ட கவிதை இல்லை’ என்று எத்தித் தள்ளிவிடுவார்களோ என்கிற அச்சம் வேறு. அதனால் எனக்கு வசப்படும் உயரத்தில் உள்ள கனிகளை மட்டும் கொய்து உண்டு நிறைவுடன் இருந்துவிடுவது உத்தமம் என்று தோன்றுகிறது.

அப்படி இருந்தும் இவ்வருட சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நீராம்பல் கவிதைத் தொகுப்பு கிடைத்தது என்பதை ஊழ் என்றுதான் சொல்லவேண்டும்.. ஒற்றைச் சிறகு ஒன்றை வைத்து தவிர்க்கப்பட்ட தனிமையைப்பற்றி பேசத் தொடங்கி வேண்டுவன கொண்டு பிரார்த்தனையில் முடிந்துள்ள இந்நூலில் 50 கவிதைகள் இருக்கின்றன.

இருபக்கத்திலும் சுவை
குறையவோ அதிகரிக்கவோ
கூடாதென்ற கவனம்
ஒவ்வொரு முறை உதிர்க்கும்
சொற்களிலும் பட்டுத்தெறிக்கின்றன

கோப்பைகளின் அளவு எப்படி மாறாமல்
அப்படியே இருக்கின்றன என்ற வியப்பில்
தெரிந்தது ஒரு வெறுமை
(வெறுமையாகும் தேநீர்)

சமூகத்தில் அல்லது தனிப்பட்ட வாழ்வில் உள்ள சிக்கலான மனதை வருத்தும் உணர்வுகளையும், யதார்த்தங்களையும் மறைக்காமல் பேச விரும்புகின்றனர் கவிஞர்கள். பொதுவாக கண்கள் பேசும் வார்த்தைகளைப் பற்றி பேசாத கவிதைத் தொகுப்புகளே இல்லை எனலாம், நீராம்பல் உட்பட. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்களுக்கு என்ன பயன் என்று குறள் கூட குறுகிறதே. ஆனால் உள்ளம் திறக்காது, புறப்பூச்சுக்கள் கலையாது, வெறும் இதழ்கள் பேசும் வாய்ச்சொற்களுக்கு என்ன பலன் என்று கேட்கிறது வெறுமையாகும் தேநீர்.

வெறுப்பு, ஏமாற்றம், தனிமை மற்றும் தோல்வி போன்ற மனவீழ்ச்சிகள் கவிதைகளுக்குள் ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. ஏனென்றால் இவை கவிகளின் அந்நேரத்து அகவெளிப்பாடு. எனவே அந்த மணித்துளிக்கான கவிதைகள் அதற்கான சுவையையும் நெடியையும் சுமந்துதான் வரமுடியும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணிய கவிதை உயிர்த்தெழுதல்.

ஓடாத கால்கொண்டு
உயிர்த்து வாழப் புறப்படுகிறேன்.
வாழ்த்த வழியில் நிற்காதே!

(இதே உருவகம் கொண்டு இன்னொரு கவிதையையும் இந்நூலில் படித்த நினைவு இருக்கிறது. அதே போன்று ஒற்றைச்சிறகு உருவகமும்.)

என் மகளிடம் என் சாயல்
இல்லைஎன்பதே
ஆசுவாசமாக இருக்கிறது
(அவளும் நானும்)

தனிமனித உளவியல் போராட்டத்தை வெளிப்படுத்துவதால் மொழியில் அடர்த்தியுடன், கவிதையின் பெருமூச்சு போட்டியிருகிறது. இரு மனங்களின் சலனமற்ற உரையாடல்களை இரைச்சல், ஏகாந்தம், அறியாக் காதல் கவிதைகள் நளினமாகச் சொல்லிச் செல்கின்றன.

ஆழ்ந்த நம்பிக்கையின்மை கொண்ட அல்லது எதிர்பார்ப்பு பொய்த்துப் போன ஏமாற்றத்தின் வலி தெரிக்கும் கவிதைகளை, ஒன்றன் பின் ஒன்றென வரிசை கட்டி நிற்கும்போது, ‘அடப்பாவமே இவர் இதையெல்லாம் கடந்துதான் போய்விடக்கூடாதா’ என்று வாசகனாக என் மனம் ஆதங்கப்படுகிறது.

நரகத்தின் வாயிலில்
சொர்க்கம் உண்டென
எண்ணுவது அறியாமை.

சற்றே மனக்கண் திறந்தால்
தெரியும்.

மூடிய கதவின் மறுபுறம்
நிற்பது நீயா?
நானா?

(நீராம்பல்)

இன்ஸ்டா, வாட்ஸாப் டபுள் டிக் எல்லாம் ஒருவரின் உறவில் செலுத்தும் ஆதிக்கம் எவ்வளவு என்பது புரிகிறது. எனக்கு திருமணம் நிச்சயமான பொழுது நண்பரின் அறிவுரை – குறுஞ்செய்தியில் பேசாதே, அதனால் முறிந்த மணவிழாக்கள் நிறைய என்பது. இவ்வளவு ஆண்டுகள் கழிந்து இத்தலைமுறையின் சொற்களைக் கொண்ட கவிதைகளைப் படிக்கையில் இந்நினைவு வருகிறது. அறம்/அகம்/புறம் பேசிய தமிழ் கவிதைகள் டபுள்டிக் பற்றிப் பேசித்தான் ஆகவேண்டுமா? ‘அழைப்பைத் தவிர்க்கவும்.. குறுஞ்செய்தி மட்டும் அனுப்பவும்’ என்று தகவல் பரிமாற்றத்தில் குறுக்கிக்கொண்ட தலைமுறைக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டா, டபுள்டிக் என்பது பெரிய அவஸ்தை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அக்கவிதைகளில் என்னை இணைத்துக்கொள்ள முடிவதில்லை. அந்த வயதைத் தாண்டிவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

அதைக் கடந்து தனித்திருக்கும் நிலவு படிக்கும்போது சாந்தமாகிவிடுகிறேன்.

என் நிழல் முன்னே விழுந்து
கோரப் பற்களைக் காட்டிச் சென்றது
ஓடுபாதை வழியே பின் தொடர்ந்த
நிலவும் சோர்வாய் தலை சாய்த்தது
இப்போது நான்
நிலவு

இது ஆளுமையின் மறு பக்கம். இருண்ட பக்கம். தனிமையில் உழல்பவனின் மனச் சிதறல். தனியாக இருக்கிறது என்பதற்காக கைவிடப்பட்ட ஒருவனும், நிலவும் ஒன்றாகுமா? இவன் இருப்பது வெறுமை. நிலவு என்பது ஏகாந்தம். ஆனால் இரண்டும் ஒன்றே என்கிறது கவிதை. நான் யோசித்தமட்டில் இரண்டும் ஜடம்!. ஒன்று உயிரற்ற பாறை; இன்னொன்று உயிருள்ள மனிதன்; உயிரற்ற பாறை ஒளிவிட்டு ஏகாந்தமாகவும், உயிருள்ள மனிதன் இருண்டு போய் ஜடமாகவும் இருக்கும் நிலை (வேண்டாம் விட்டுவிடலாம்!!)

அது போன்று யாருமற்ற வீடு.

கடமைகளை முடித்த நிறைவில்
மெல்ல விடைபெற
தயாராகிறது யாருமற்ற
அந்த வீடு

வீடு பற்றிப் பேசுகையில் இன்னொரு கவிதை தோன்றுகிறது.

நெருக்கடியுள் நெரிந்து அனலும் காற்று
என்ன செய்ய?
இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
…
…
எனவே தான்
இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
என்றாலும்
நான் அங்கே ஓர் வீடு கட்டி முடித்து வைத்துள்ளேன்.
– மாற்றப்படாத வீடு (தேவதேவன்)

வாழ்வின் பாதிக்கும் மேலே வாடகை வீட்டில் வசித்த என்னைப் போன்றவனுக்கு, தேவதேவன் சொன்ன ‘அங்கே ஓர் வீடு’ என்பது ஒரு இலட்சியம்! எனவே வாசிக்கும் நேரத்தில் என்னை வாரிச்சுருட்டி விழுங்கிவிடுகிறது இது.

யாருமற்ற வீடு போன்று இந்தக் கவிதைகள் மனதில் நம்பிக்கை பிறக்க செய்கின்றன.

  • நம்பிக்கை (எதிர்காலத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையைப் பேசுவது/எள்ளல் செய்வது)
  • உதிரா மலர் (பழையன கழிதல்)
  • வேண்டுவன (தேடல்/வேண்டுவன)
  • குதித்தெழும் பட்டாம்பூச்சி (அங்கீகாரம்/ஏற்பு)
  • யாருமற்ற வீடு (பக்குவம்)

இந்நூலை இரவல் பெற இங்கே தட்டவும் – நீராம்பல் / கங்கா பாஸ்கரன். Nīrāmpal / Kaṅkā Pāskaran̲.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top