It was never expected that the full thrust of 18 Division would be thrown against the Malay Regiment directly. 13,000 seasoned Japanese versus 1400 untested Malays.
– Chapter 6: The Battle of Pasir Panjang

மலேசியா மற்றும் சிங்கப்பூர் என்னைப் போன்ற வெளிநாட்டினருக்கு ஒரு பிரம்மாண்டமான வரலாற்று உணர்வை அளிக்கின்றன. இது, இரண்டாம் உலகப்போர் ‘ரத்தமும் சதையுமாக’ நிகழ்ந்த நிலம். எனது நண்பர்கள் என்னை சில முறை கிராஞ்சி போர் கல்லறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 1940-களில் இங்கே என்ன நடந்தது என்பதை அந்த மண்ணில் நின்றுகொண்டு உணர்கையில், அது என்னை மனஅழுத்தத்திலும் மனச்சோர்விலும் தள்ளிவிடுகிறது.
ஸ்டூவர்ட் லாய்ட் எழுதிய இந்த நூல், இரண்டாம் உலகப்போரின் போது ஒரு புதிய இராணுவப் படை – மலாய் ரெஜிமென்ட் – வீரத்தை வெளிப்படுத்திய நிகழ்வை விளக்குகிறது. நூறு பக்கங்களுக்கும் குறைவாக உள்ள, எளிதாகப் படிக்கக்கூடிய இச்சிறு நூல், பன்னிரண்டு அத்தியாயங்களில், ரெஜிமென்டின் தொடக்கம், வளர்ச்சி, பயிற்சி, கொடூரமான போர் மற்றும் அதன் விளைவுகள், மீட்சி மற்றும் இறுதியாக மலேசிய சுதந்திரத்திற்குப் பிந்தைய எல்லை மோதல்கள் மற்றும் உலக அளவில் அமைதி காக்கும் பணியில் அவர்களின் பங்கு பற்றிய காலவரிசைப் பதிவைச் சித்தரிக்கிறது.

சமீபத்தில் ஸ்டூவர்ட், சிங்கப்பூரில் உள்ள புக்கிட் சந்து அருங்காட்சியகத்தில் (பிரிட்டிஷார் ஜப்பானியர்களிடம் சரணடைவதற்கு முன்பு அந்த கொடூரமான போர் பாசிர் பாஞ்சாங்கில் உள்ள இந்த மலையில் நடந்துள்ளது) ஒரு நிகழ்வில் பேசினார். ஒரு வாரம் முன்புதான் நான் இந்த நூலை வாங்கியிருந்தேன். அருங்காட்சியகத்தில் நிகழ்வில் அவரது கதை சொல்லும் தன்மை எங்களின் ஆர்வம் குறையாமல் அமர்ந்திருக்க வைத்தது. அதற்குப் பிறகு காலைப் பயணத்தின்போது இதை வாசிக்கத் தொடங்கினேன்.
மேஜர் புரூஸ், பிரிகேடியர் ராஜா லோபே மற்றும் லெப்டினன்ட் அட்னான் சயீதி போன்றோரின் ஆளுமைகளை அவர் துல்லியமாக சித்தரிக்கிறார்.
இந்த நூல் ஜப்பானியர்களின் விரைவான போர் நடவடிக்கையை மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்பாராத அணுகுமுறைகளையும் மற்றும் நேச நாட்டுப் படைகளின் தோல்வியைப் பற்றிய சித்திரத்தையும் அளிக்கிறது. யாராலும் சவால் விடமுடியாத, ஏகோபித்த வான்வெளி ஆதிக்கத்தை ஜப்பானியர்கள் பெற்றிருந்ததை இந்நூல் காட்சிப்படுத்துகிறது. இங்கே இவர்களை பின்வாங்கவோ பலியாகவோ விட்டுவிட்டு, பிரிட்டிஷ் வளங்கள் எங்கே செலவிடப்பட்டன? ஒருவேளை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலா?
ஜப்பானியர்களின் சிறந்த போர்த் தளவாடங்கள், தகவல் தொடர்பு மற்றும் மூலோபாயத்தை ஸ்டூவர்ட் எடுத்துக் காட்டுகிறார். மறுபுறம், நேச நாட்டுப் படைகளிடம் இந்த வளங்கள் குறைவாக இருந்தன – ஒரு கட்டத்தில், மோசமான தகவல் தொடர்பு காரணமாக அவர்கள் தங்கள் சொந்தப் படைகளையே தாக்கியதையும் படிக்கும்போது, அவர்களின் வீழ்ச்சிக்கான காரணம் புரிகிறது..
இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்குவதாக உறுதி கூறி, மோகன் சிங் தலைமையில், இந்திய வீரர்களின் ஆதரவைப் பெற ஜப்பானியர்கள் எவ்வளவு முயன்றார்கள் என்பது குறித்த ஸ்டூவர்ட்டின் ஆவணம் எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. (ஜப்பானியர்களுடனான மோகன் சிங்கின் உறவு பின்னர் மிகவும் மோசமாக உடைந்தது. அதனால் அந்த இடத்தை நேதாஜி சுபாஷ் நிரப்பினார்).
இந்திய தேசிய இராணுவத்தின் சிக்கலான அரசியல் இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம் இல்லையென்றாலும், இந்தியப் படைகளை சம்மதிக்க வைக்கப் பயன்படுத்தப்பட்ட பிரச்சாரம் எனக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்தியப் படைகள் உலக வல்லரசுகளால் எடுப்பார் கைப்பிள்ளை போல அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அழிவைப் பற்றி யாருக்கென்ன கவலை. தெற்காசியாவில் அவர்களைப் பற்றிப் பேசுபவர்களே குறைவு. அப்படியும் பேசுபவர்கள் ‘கட்சி மாறியவர்கள்’ என்று மேலோட்டமாக ஏளனம் செய்துவிட்டுப் போவோர்களும் உண்டு. நான் அவர்களிடம் ஒன்றுதான் கேட்பேன் – பிரிட்டிஷ் பக்கமோ – ஜப்பான் பக்கமோ சேர்ந்து இவர்களுக்கு ஆகவேண்டியது என்ன? சுதந்திரம் என்கிற ஒன்றைக் காட்டி அவர்களைப் போரில் தள்ளி அவர்கள் உயிரை வாங்கினார்கள் என்பதே நமக்கு உரைக்கக்கூடிய உண்மை. அது இந்த நூலுக்குத் தொடர்பில்லாதது. பிறிதொரு நாளில் பேசலாம்.
மலாய் ரெஜிமென்ட்டின் போருக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு, மலேசியா-இந்தோனேசியா மற்றும் மலேசியா-பிலிப்பீன்ஸ் மோதல்கள் வரையிலான சண்டைகளையும் உள்ளடக்கி காலக்கிரம வரிசையில் அடுக்கி ஆவணப் படுத்துகிறது இந்நூல். ஸ்டூவர்ட் தனது வரலாற்றுச் கதைசொல்லும் ஆற்றலைப் பயன்படுத்தும் விதம் – ஒரு காலவரிசையில் நிகழ்வுகளை இணைப்பது மற்றும் அதிகாரிகளைப் பற்றிய பின்னணியை வழங்குவது – இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது. இவை அனைத்தையும் சேகரிக்க அவர் எவ்வளவு முயற்சி செய்திருப்பார் என்று நான் வியக்கிறேன்.
இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி முடிக்கும்போது, பாசிர் பாஞ்சாங் போரில் இறந்த அல்லது பின்னர் தூக்கிலிடப்பட்ட அந்த வீரர்கள் என் நினைவில் எழுகின்றனர். அவர்களில் யாரும் உயிர் பிழைப்பதற்காக தங்கள் சீருடைகளைக் களைவதை ஏற்கவில்லை. உதாரணமாக, லெப்டினன்ட் அட்னான் சயீதி தன் மனைவியையும் குழந்தைகளையும் விட்டுச் சென்றார். அவரது மனைவியும் 1940-களின் பிற்பகுதியில் நோய்வாய்ப்பட்டு, குழந்தைகளுக்குத் தந்தையும் தாயும் இல்லாமல் இறந்து விடுகிறார். சயீதியின் சகோதரரும் பிரிட்டிஷ் அரியணையைக் காப்பாற்ற தனது உயிரைத் தியாகம் செய்தார்.
போர் ஒவ்வொரு மலாய் வீரரின் குடும்பத்தையும் அழித்தது. அவர்கள் தங்கள் பிரிட்டிஷ் அடையாளம் காரணமாக ஜப்பானிய ஆக்கிரமிப்பைத் தாங்கிக் கொள்வதில் சிரமங்களைச் சந்தித்திருக்கலாம், மேலும் பின்னர் பிரிட்டிஷ் மீள் ஆக்கிரமிப்பின் போது நிதி நெருக்கடியைச் சந்தித்திருக்கலாம். மறைவுக்குப் பிந்தைய விருதுகள் இவர்களுக்கு பிரிட்டிஷாரால் வழங்கப்பட்டிருக்கின்றன, எனவே அவர்களின் அடையாளங்கள் நிலைநிறுத்தப்பட்டன. ஆனால் வாசிப்பவரை இந்நிகழ்வுகள் சிந்திக்க வைக்கின்றன: ஒரு குறியீட்டு மரியாதை (symbolic honor) மட்டுமே அவர்களின் தனிப்பட்ட இழப்புகள் மற்றும் பொருளாதார சிரமங்களை ஈடு செய்யுமா? அதுதான் ஒரு சிப்பாயின் வாழ்க்கை போல!

