சிங்கப்பூரில் எழுத்தாளர் விழாவின் மாதம் இது, இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “நம் இயற்கையும் இயல்புகளும்”. சூழியல் எழுத்தாளர் எஸ். தியடோர் பாஸ்கரன் அழைக்கப்பட்ட பேச்சாளர்களில் ஒருவர். பாதுகாப்பு முயற்சிகளில் பசுமை இலக்கியத்தின் பங்கு பற்றி அவர் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகிறது. நவம்பர் 9, 2024 அன்று கலை மன்றத்தின் நீல அறையில் அந்த அமர்வு நடந்தது.
1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டை அவர் நினைவு கூர்ந்தார், அதன்பிறகு உலகம் முழுவதும் இயற்கை பற்றிய கவலைகள் அதிகரித்தன என்று குறிப்பிட்டார். பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன, பல மாநாடுகள் கூட்டப்பட்டு, இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான உறவு பேசுபொருள் ஆகின.
அவர் ரேச்சல் கார்சனின் சைலண்ட் ஸ்பிரிங் உடன் தன் உரையைத் தொடங்கினார். இந்த பணி வரலாற்றின் போக்கையே மாற்றியது என்று கூறினார். ரேச்சல் ஒரு உயிரியலாளர் மற்றும் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் தன் சிற்றூருக்குத் திரும்பியபோது, பறவைகள் இல்லாததைக் கண்டார். அது வசந்த காலம், பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் பருவம், அதனால் அவற்றின் பாடல்களுக்கு செவி கொடுக்கக் காத்திருந்தார். எனினும், அவைகளைக் காணவில்லை. புழுக்களை அழிக்க பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதை அவர் அறிந்தார். புழுக்கள் இல்லாததால், புழுக்களை உண்ணும் பறவைகள் வருவதை நிறுத்திவிட்டன. இதனால், வசந்தம் ஊமையாகிப்போனது.

தமிழ் இலக்கியம் பற்றி விவாதிக்கும் போது, சுற்றுச்சூழல் பற்றி எழுதுபவர்கள் தன்னார்வலர்களே, உயிரியலாளர்கள் அல்லர் என்பதைச் சுட்டிக் காட்டினார். பல்வேறு வடிவங்களில் தமிழின் பசுமை இலக்கியத்தின் முக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தினார். இது அவரது பேச்சை பொருள் பொதிந்ததாக்கியது.
மா.கிருஷ்ணன் அவர்களுடன் தொடங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் காட்டு விலங்குகள் மீதான இந்திய மற்றும் மேற்கத்திய அணுகுமுறைகளுக்கு இடையே முற்றிலும் மாறுபட்ட போக்கினை அவரது எழுத்துக்கள் காட்டின. பொ அப்பாசாமியைப் பற்றி குறிப்பிட்டார்.
சூழலியல் எழுத்துக்களைப் பற்றி விவாதிக்கும் போது புனைவுகள் தவிர்க்க முடியாதவை.
புனைவுகள்
புனைகதை பற்றி பேசும் போது, அவர் சா. கந்தசாமியின் சாயாவனம் புதினத்தை அறிமுகப்படுத்தினார். சாயாவனம் என்பது சூழலியல் அக்கறைகளை மையமாகக் கொண்ட இலக்கியத்தின் ஆரம்பகால உதாரணங்களில் ஒன்று. தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் வன அழிவில் உண்டான தொழில் வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. தமிழில் சுற்றுச்சூழல் சொற்களஞ்சியம் முறையாக நிறுவப்படுவதற்கு முன்பே இது எழுதப்பட்டது என்பது இதன் சிறப்பு.
சிற்றூர்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதும்போது காடுகள் பற்றிய முறையான (அல்லது இயற்கையான) சொற்களைப் பயன்படுத்தும் நவீன கால தமிழ் எழுத்தாளர்களைப் பாராட்டினார். இது போன்ற பல வார்த்தைகள் சமூகத்தில் மறைந்துவிட்டன என்பதை lion-tailed macaque உதாரணத்தைப் பயன்படுத்தி அவர் விளக்கினார். இதை ‘சிங்க-வால் குரங்கு’ என்று தமிழில் மொழிபெயர்ப்பவர்களுக்கு சரியான தமிழ்ச் சொல் இருப்பது தெரியாது. ‘சோலை மந்தி’ என்ற சொல் ஏற்கனவே இங்கே உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார், இந்த குரங்குகள் சோலை வனங்களில் வாழ்ந்ததால் lion-tailed macaque என்பதற்கு இது சரியான சொல். சோலைகளுக்கு சற்று அப்பாற்பட்ட பிற காடுகளில் வாழ்ந்தவைகளுக்கு ‘காட்டு மந்தி’ என்ற மற்றொரு சொல்லையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அவர் பெருமாள் முருகனின் இரண்டு படைப்புகளைக் குறிப்பிட்டார்: கூள மாதாரி மற்றும் பூனாச்சி. இந்த நாவல்களில் ஒன்று ஜவ்வாது மலை மற்றும் கல்வராயன் மலைகளில் இருந்த செந்நாய் (காட்டு நாய்) பற்றி விவாதிக்கிறது, ஆனால் அவை இப்போது அருகி விட்டன. இன்னொரு இடத்தில் காட்டுப் பூனைகள் மற்றும் அவற்றை உண்ணும் மனிதர்களின் விசித்திரமான நடத்தை ஆகியவற்றைக் குறிப்பிட்டு பெருமாள் முருகனைப் பாராட்டுகிறார். காட்டுப் பூனைகளின் அழிவுக்கு ஒரு அதுவும் ஒரு காரணம்.
எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சோ தர்மனின் கூகை நாவலை அறிமுகப்படுத்தினார். மற்றொரு விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸின் ஆழி சூல் உலகு, கடல் உயிரிகளைப் பற்றியும் மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறது. திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை கழிவுகள் ஆறுகளில் விடப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்ததற்காக சுப்ரபாரதி மணியன் எழுதிய சாயத்திரையைப் பாராட்டுகிறார்.
ஜெயமோகனின் நாவல்களான ரப்பர் மற்றும் காடு ஆகியவற்றை நினைவு கூர்ந்தார், ஏனெனில் அவை காடு மற்றும் அதனைச் சார்ந்த வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டவை.

கடிகை பெர்னார்டின் அது ஒரு கடல் காலம், மணப்பாடு முதல் புலிக்காட் ஏரி வரையிலான கடற்கரை சமூகங்களின் கலாச்சாரம் பற்றிய விரிவான குறிப்புகளின் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டுரைகள்
பல்வேறு ஊடகங்களில் எழுதப்படும் கட்டுரைகள் சூழியல் சிந்தனைகளுக்குப் பங்களிக்கின்றன. மழைக்காடுகள் மற்றும் அலையாத்திக் காடுகள் குறித்து எழுத்தாளர் நக்கீரன் எழுதிய கட்டுரைகளை அவர் குறிப்பிட்டார்.
பதிப்பகங்கள்
தமிழகத்தில் பசுமை இலக்கியத்தை வெளியிடுவதற்காகவே தொடங்கிய பதிப்பகங்கள் உள்ளன. பறந்து கொண்டிருக்கும் பறவைகளை படம் பிடிக்க பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை வழங்கும் டிஜிட்டல் கேமராக்களின் திறன்களை குறிப்பிட்டார். சிறந்த வன உயிர்கள் படங்களை எடுத்து பதிப்பகங்களுக்கு வழங்கும் ரவீந்திரன் நடராஜனை அவர் சுட்டிக்காட்டினார்.
கவிதைகள்
கவிதையில் இருந்து அவரது காட்டிய மேற்கோள்கள் இந்த உரையில் சுவையைச் சேர்த்தன.
ஆசை தம்பியின் கொண்டலாத்தி கவிதையை மேற்கோள் காட்டினார்.
மௌனன் யாத்ரிகா தான் இனிக்கும் பழம் என்ற கவிதைத் தொகுப்பிற்காகக் குறிப்பிடப்பட்ட அடுத்த கவிஞர்.
கவிஞர் சதீஷ் முத்து கோபால் பறவைகள் பற்றிய அறிந்திருப்பதையும், பறவைகளின் உலகிற்குள் வாசகர்களை மூழ்கடிக்கும் அவரது எழுத்துத் திறமைக்காகவும் அறிமுகப்படுத்தினார்.
தேவதேவனின் சிட்டு குருவி கவிதையும் பேச்சில் இடம் பிடித்தது.
சஞ்சிகைகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இதழ்களின் பங்கு சிறப்பிக்கப்பட்டது. காடு, உயிர், பூவுலகின் நண்பர்கள் போன்ற இதழ்கள் குறிப்பிடப்பட்டன.
தற்கால சூழியல் நிகழ்வுகள்
தமிழ் சமூகம் தட்டான் பூச்சிகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் பற்றி அறிய தற்கால கானகப் பயணங்கள் உதவியுள்ளன.
“சிம்பேன்ஸி” என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை பற்றி வலைப்பதிவுகள் அல்லது மின்னஞ்சல் குழுக்களில் ஒரு ருசிகரமான விவாதத்தைக் குறிப்பிட்டு, கலாப்ரியாவின் கவிதையுடன் அந்த உரை நிறைவடைந்தது.
பேச்சுக்குப் பிறகு நடைபெற்ற விவாதம் சூழியல் நலன்களை மேலும் ஆராய்ந்தது.
நவம்பர் 10, 2024 அன்று, சிங்கப்பூரில் உள்ள Press Room ன் நிறுவனர் கெல்லி செங், மலேசிய காட்சிக் கலைப் படைப்பாளர் ஷரிபா நதிரா மற்றும் தியடோர் பாஸ்கரன் இடம்பெற்ற “Literary Skylines: Narratives of Urbanisation” என்ற குழு விவாதத்தைக் கவனிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது; ஆசிய நாகரிக அருங்காட்சியகத்தில் நடந்த இந்நிகழ்வை சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் அருங்காட்சியக இயக்குனரான கென்னி டிங் மட்டுறுத்தினார்.
அதில் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி, கடந்த 4,000 ஆண்டுகளில் நகரக் காட்சிகளைக் காட்சிப்படுத்தினார். அதே நாளில், அவருடன் சிங்கப்பூரின் வளரும் எழுத்தாளர்கள் பங்குபெற்ற ‘இயற்கையும் தமிழிலக்கியமும்: தியடோர் பாஸ்கரனுடன் ஓர் இளையர் கருத்தரங்கு’ நடந்தது.

திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் நிறைவடைந்ததும், Arts House-இன் புல்வெளியில் எழுத்தாளர்கள் தியடோர் பாஸ்கரன், சதீஷ் முத்து கோபால் மற்றும் சிவானந்தம் நீலகண்டன் ஆகியோருடன் ஒரு குழம்பி கோப்பையுடன் நடத்திய ஒரு சுவையான கலந்துரையாடல் – அரட்டை என்றே வைத்துக்கொள்வோமே – அந்த ஞாயிறு அந்திவேளையை அழகாக்கியது. மாலை வரை நீடித்த உரையாடலில் மற்றும் சூழியல், தமிழ் மற்றும் சூழியலில் சர்வதேச அரசியலின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளைத் தொட்டுச் சென்றது. இப்படியாக, சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் முதல் வார இறுதி விவாதங்கள், சிரிப்புகள், எழுத்தாளர் கையொப்பங்கள் என மதி மகிழும் வண்ணம் நிறைவடைந்தது!




குறிப்பு: இணைப்புகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவை முற்றிலும் என்னுடையதே. தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
- சுற்றுச்சூழல் தொடர்பான தவறுகளின் மொத்த தாக்கமே பருவநிலை மாற்றம் – Tamil Murasu
- “கண்களைத் திறந்து பாருங்கள்” – சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் தியடோர் பாஸ்கரன் – Sivanandam Neelakandan
