சீனா – விலகும் திரை
ஆசிரியர் – பல்லவி அய்யர்
தமிழில் – ராமன் ராஜா
பரிந்துரைத்தவர் – தமிழ் பயணி
பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8493-164-8
[polldaddy poll=6916003]
☻☻☻☻☻☻உயர் அழுத்த மொக்கைப் பதிவு – எச்சரிக்கை☻☻☻☻☻☻
இது புத்தக விமர்சனம் அல்ல. வாசிப்பனுபவமே.
இப்ப புதுசா ஒரு புத்தகம் வெளியாகுதுன்னா அதற்கு ஒரு விழா வைச்சு நல்லாத் தெரிஞ்சவராப் பார்த்து ஒரு அறிமுக உரை கொடுக்கிறதில்லையா. அதுமாதிரிதான். நம்பள யார் கூப்பிடப்போறா? நல்லாத் தெரிஞ்சவரா இருந்தாதான் அறிமுக விழா கொடுக்கனுமா என்ன? அதை ரசித்துப் படிக்கிறவங்க கொடுத்தா ஏத்துக்க மாட்டாங்களா! ஆக இனி நேரம் கிடைக்கையில் இதுபோன்ற பிளேடுகளையும் எடுத்துவிடுவதாய் இருக்கிறேன்.
சீனா என்றால் உலகம் முழுக்க ஆர்வம் கொப்பளிக்கிறது. நாமும் சீனாவைப் போட்டியாளராக நினைத்து மிரண்டு கொண்டிருக்கிறோம். சீனாவுக்கு நாம் போட்டி என்று நினைத்தும் ஏமாந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சீனாவின் அதிக இலக்கங்கள் கொண்ட எந்த பண விவகாரங்களையும் படித்தால் நமது சாதாரண மூளையை அயற்சி அடையச் செய்து கொட்டாவி வந்துவிடும். இது போன்ற மிகச் சாதாரண வாசகன் நான். “Entry Level” வாசகனுக்கு சீனாவினைப் பற்றி இன்னொரு புத்தகத்தையும் பரிந்துரைத்தார் தமிழ்பயணி. ஆனால் இதை முதலில் படிக்கவேண்டும் என்று அறிவுரைத்தவரும் அவரே. அந்த அளவிற்கு இது மேலான புத்தகம் அல்ல. ஆனால் கொஞ்சம் ஜாலியான புத்தக நடை. முதலிலிலேயே பல இலக்கங்கள் கொண்ட வர்த்தகப் புள்ளி விபரங்களைப் பார்த்தால் படிப்பதை விட்டுவிடுவேனோ என்கிற பயம் அவருக்கு.
பல்லவி அய்யர் – இந்து குழும பத்திரிகைகளின் பெய்ஜிங் நிருபராக இருந்தவர். சீன மொழியைப் பேச அறிந்தவர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் வசித்தவர். அவரது சீன பயணம் துவங்கி அவரது சீன வாழ்வு அனுபவமே புத்தகமாக வெளி வந்துள்ளது. பழங்கால தோற்றுப்போன விவசாய நாடான சீனா பொருளாதாரப் பெரு வெற்றி பெற முயற்சிகளைத் துவக்கும் கால கட்டத்தில் அவர் அங்கு வசித்திருக்கிறார். அப்போது நடந்த விசித்திர விசியங்களை விருப்பத்துடன் சொல்வதால் தடையின்றிப் படிக்க முடிகிறது. “light-weight”. தொட்டது தொன்னூறுக்கும் இந்தியாவை ஒப்பீடு செய்வதால் எளிதாக சீன நிலையைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அதுதானே இந்தியனின் பார்வையில் பார்ப்பதில் உள்ள இலாபம்.
சீனா – The Hero Introduction!
சீனாவைப் பற்றிய சாதாரண இந்தியாவின் பார்வை முதல் கட்டுரையிலேயே தெரிகிறது. அவர் விசா வாங்க சீனத் தூதரகத்திற்குச் செல்லும்போது.
“டெல்லி சாந்திபத் சாலையில் உள்ள சீனத் தூதரகத்தில் நான் விசா வாங்கப் போனபோது அங்கே ஈ காக்காய் கிடையாது. மயான அமைதி. அக்கம்பக்கத்தல் இருக்கும் எல்லாத் தூதரகங்களிலும் திருப்பதி வரிசை போல விசாவுக்காகக் காத்திருந்து வெயிலில் வேர்த்திருந்தது கூட்டம். சீனத்து விசாவைத்தான் சீந்துவாரில்லை”
யாருமில்லாத அந்த டீக்கடையில் ‘வெளிநாட்டு நிபுணர் – வாய் குவோ ஜுவான் ஜியா’ என்கிற அனுமதியுடன் டீ ஆத்த ஏரோப்பிளேன் ஏறுகிறார் ஆசிரியர். வினோத மொழி – விவகாரமான சாப்பாடு – விளங்கிக்க முடியாத மனிதர்கள் என்று அவரது அனுபவங்கள் தரும் புரிதல்கள் இந்தக் கட்டுரையில் ஆரம்பமாகிறது. அதற்காக ஒரே அடியாக சீனா அமிழ்ந்து கிடந்த பலங்காலமில்லை. ஒலிம்பிக்ஸ் நடத்தி முடித்து, உலகப் வர்த்தக அமைப்பிலும் சீனா நுழைந்திருந்த கால கட்டம் அது. இந்தியா என்றால் சீனர்கள் என்ன நினைக்கிறார்கள் – பாலிவுட் – அழுக்கு – நெரிசல் – உலகமெங்கும் இதைத்தானே நினைக்கிறார்கள். சீனர்கள் விதிவிலக்கா என்ன.
முதல் கட்டுரையிலேயே சிண்டியா “Chindia” என்கிற பதத்தை அறிமுகப்படுத்துகிறார். “தன் வடபுலத்துச் சகோதரனைப்போல தானும் முன்னேற வேண்டும் என்று இந்தியாவுக்கு வெறி. ஆனால் சீனாவுக்கோ அமெரிக்காதான் குறி. அவர்களைப் பொருத்தவரை, இந்தியாவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல”. அவரது வாசகம் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டே வருகிறது.
குண்டுப் பையனும் ஆப்பிள் பெண்ணும் கட்டுரையில்:
ஏழை சீனா – பகட்டுச் சீனா
சீனா படுவேகமாக வளர்கிறதாமே என்கிற இந்தியர்களின் குசல விசாரிப்புகளுடன் முடியும் ஆசிரியரின் முன்னுரை – அடுத்த கட்டுரையில் தலைகீழாக ஆரம்பிக்கிறது. பிபிஐ நிறுவனத்திற்கு முதலில் போகிறார். இது நடந்தது 2002ல். “அந்தப் பிரதேசமே சரியான குக்கிராமம். பக்கத்திலிருந்த ஹெபேய் கிராமத்திலிருந்து மஞ்சள் பல்லும் ஒழுகும் மூக்கும் கொண்ட விவசாயிகள் கல்லூரி வாசல் முழுவதும் கடை பரப்பி சாக்குப் படுதா கட்டி கேரட் முட்டைக்கோஸ் விற்பார்கள்.” இந்தக் காட்சிக்குப் பக்கத்திலேயே கண்ணாடியும் க்ரோமியமும் இழைத்த சாத்தானின் கோயிலான பெய்ஜிங்கின் நவீன வர்த்தக மையம் இருந்தது. பரம ஏழையும் கொழுத்த பண வளர்ச்சியும் ஒருங்கே இணைந்த காட்சியைத்தான் இப்படிக் காட்ட முயற்சித்திருக்கவேண்டும்.
அடுத்த பக்கத்திலேயே சீன வளர்ச்சியின் மறுபக்கத்தையும் பார்த்திருக்கலாம். “ஹெபேய் விவசாயிகளையும் அவர்களது கேரட்களையும் சேர்த்துத் துரத்திவிட்டு அங்கே பளபளக்கும் அபார்ட்மெண்ட்களும் பெரிய பெரிய ‘மால்’களும் வந்தன. பெய்ஜிங்கின் ஈவு இரக்கமற்ற நவீனமயமாக்கல் இருக்கிறதே. அப்பப்பா பயங்கரம்!”
உலகில் கிடைக்கிற கான்கிரீட், உருக்கு என்று எந்த ஒரு கட்டுமானப்பொருட்களின் பெரும் பங்கினை விழுங்கி வந்த இந்த வளர்ச்சியின் உக்கிரத்தைப் புத்தகம் முழுக்க படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர்.
ரோடு போடு
சாலை என்பது வளர்ச்சியின் அங்கம். எங்களுக்கு ரோடு என்றால் அது திருச்சி திண்டுக்கல் ரோடுதான். என்ன ஒரு வழவழப்பு. என்ன வேகம் என்று பேசிக்கொள்வோம். இது என்னவோ நடந்து 60 வருடம் ஆகவில்லை. அதிக பட்சம் 15 வருடம் ஆகியிருக்கும். நாற்கர சாலைகள் வந்துதான் தென் தமிழக மக்களுக்கு சாலைகள் என்றால் என்ன என்று காட்டியிருக்கின்றன. அவை யாவும் வராத காலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் இந்திய சாலைகளின் பால் எழும் அவமான உணர்ச்சியைக் காட்டியிருக்கிறது. இந்திய எல்லையை விட்டு வெளியே போனால் அனைவருக்கும் வருகின்ற உணர்ச்சிதான் இது என்று நினைக்கிறேன். இரு வழிச்சாலைகளுக்கு வழியில்லாத நம்ப நாடும் – ஏரியாவையே வளைத்துப்போட்டு ஆறுவழிச்சாலையை அனாயாசமாகப்போட்டுத்தள்ளும் சீனாவும் என்கிற ஒப்பீடு இந்தக் கட்டுரையில் காணப்படுகிறது.
ஆங்கிலம் – பண சாபல்யம்
ஆங்கிலம் தெரிந்தால் உலகில் ஓரளவில் பிழைத்துக்கொள்ளலாம்.. கிழக்கில் அது செல்லுபடியாகாது என்றும் இந்தக் கட்டுரை சொல்கிறது. கல்லூரியில் அபார்ட்மெண்ட் சாவியை ஆசிரியர் கேட்டுப்பெரும் காட்சி எந்த ஒரு வடிவேலு காமெடிக்கும் குறைந்ததல்ல!
சீன மொழியின் பெயர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல் இதில் இடம்பெற்றுள்ளது. பைரன், மாண்ட்கோமரி, ஐஸ், எதிரொலி, ஆப்பிள், பரவாயில்லை இவைகள் எல்லாம் மாணவர்களின் பெயர்கள். அதிலும் ஒருவன் விக்டோரியா என்கிற பெயரை வைத்திருக்கிறான் – வைத்து இரண்டு வருடங்கள் அது பெண்பால் பெயர் என்பதே தெரியாமல். ஆங்கிலப் பித்து என்பதில் நமக்கு ஒரு படி மேலே அவர்கள் போயிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.
ஆங்கிலம் படிப்பது இனிமேல் உயிர்பிழைத்திருக்க வழி என்று போதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்கத்திய நாகரீகத்தோடு மேற்கத்தியப்பெயருக்கு மாறுவது வழக்கமாகியிருப்பதைப் பார்க்கையில் நம்மூர் கலாச்சார வேந்தர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வந்துவிடும்.
ஒரு குழந்தை முறை கண்டிப்பாக அமல்படுத்தப்பட்டு முன்னர் கம்யூனிச அதகளத்திலிருந்து தப்பித்தோர்கள் குழந்தையை பொத்திப் பொத்தி ஒரு “எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் ஆசைக் கனவுகளும் நிறைந்த அப்பாவிகளாக” வளர்த்தார்கள் என்பதை பின்வரும் கட்டுரைக்கான ஒரு சாம்பிளாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னால் அந்த அதகளம் எப்படிப்பட்டது என்பதை சுருங்க விளக்கியிருப்பார்.
கொள்கைக் குவியல்களும் நிதர்சன அவியல்களும்
பெயரளவில் கம்யூனிசம் – உள்ளே எல்லாம் கலந்த அவியல் என்று சீனாவை ஒரு வரியில் கூறும் இவர் அந்தக் கூற்றை பல உதாரணங்கள் வாயிலாக விளக்குகிறார். வெளியே மாவோ படம் – உள்ளே அமெரிக்க நிறுவனங்களின் கூடாரம் – பொருளாதார சீர்திருத்தம் மற்றும் அது தந்திருக்கும் தனிமனிதப் பொருளாதார, சமூக சுதந்திரம் – எதிர்ப்பேச்சுப் பேசாமல் அரசாங்கத்திற்கு தலையாட்ட வைக்கிற அடிமைத்தனம் – ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள் – அதை மீறிய ஊடகங்களுக்கு வைக்கப்படும் ஆப்பு – அள்ளித்தெளித்த ஊழல் – கம்யூனிச ஊழியர் கம் தொழில் முதலாளிகள் – என்று உதாரணங்கள் எக்கச்சக்கம்!
கடவுளப் பாத்திருக்கியா நீ – அது நாந்தேன்!
பாடம் நடத்தப்போகும் ஆசிரியருக்கு மாணவர்களின் அறியாமை புருவத்தை உயர்த்தச் செய்திருக்கிறது. “என் அப்பா அம்மாவிற்கு வெறும் காய்கறிச் சோறுதான் கிடைத்தது. நான் தினமும் கறி, முட்டை சாப்பிடுகிறேன்” என்று பூரிக்கும் அவர்களைப் பார்த்து வேதனைப் படுகிறார். அரசாங்கம் சொல்லித்தருவதை சீனர்கள் கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதைப் பார்க்க ஏதோ காக்காய் கக்கா போவதைப் பார்த்த உணர்ச்சி அவருக்கு வருகிறது.
“அரசாங்கம் அவர்களைப் பார்த்து வாயை மூடிக்கொள். பணம் சம்பாதிக்கும் வழியை மட்டும் பார் என்கிறது. இவர்களும் மகி்ழ்ச்சியுடன் அதைச் செய்கிறார்கள்” – இது அவருடைய மாணவர் குரலாய் ஒலிக்கிறது.
அதற்கான காரணமாக மா சே துங் அருளிய சித்தாந்த அரசியல் என்கிற ‘திரிபுரம் எரித்த’ கதையைக் காரணம் காட்டுகிறார். அடிமேல அடி செம்ம அடி வாங்கினா – அடிவாங்காம இருக்கிறதே சுகம்தானே. அதில அல்வா தின்பது ஆடம்பரம்தானே.
சீர்திருத்தங்கள் வருவதற்கு முன்பு பணியிடத்தின் (டான்வே) அடிப்படையில்தான் கம்யூனிசக் கொள்கைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இருக்க வீடு – புள்ளை குட்டி படிக்க ஸ்கூலு – நோய் வந்தா ஊசி போட ஆஸ்பத்திரி – இதெல்லாம் டான்வே கொடுக்கும். ஆனால் தொழிலாளியின் வாழ்க்கையே பணியிழத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். திருமணம் செய்து கொள்ள – குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட டான்வேயின் அனுமதி தேவையாக இருந்தது என்று ஆசிரியர் குண்டு போடும்போது….. தேங்காய் சீனிவாசன் நினைவிற்கு வருவார். “பிகாஸ்… உன் பாஸ்போர்ட் என் கையில!”
ஒத்துக்கொண்டு வாழ்ந்தால் வாழ்வு. இல்லாதவருக்கு நோவு. அரசாங்கத்தை விமர்சித்தால் ஜெயில். நிலத்தைப் பிடுங்கலாம். விசாரணையா… அது ஸ்வீட்டா காரமா? நம்மூர் பாணியில் “கஞ்சா கேஸ்” போட்டுக்கூட உள்ளே தள்ளுவார்கள் – பிறகு சொர்க்கத்திற்கு விசா கொடுத்திடுவார்கள். வழக்குப் போட்டதற்கும் பரலோகம் அனுப்பியதற்கும் சில மணி நேரங்களே இடைவெளி இருக்கும். உலகத்திலேயே பத்திரிகையாளர்களை அதிகமாக களி தின்ன வைப்பதும் செஞ்சீனாதான். அதிக மரண தண்டனை வழங்குவதும் செஞ்சீனாதான். – இதைப் படிக்கையில் கொஞ்சம் உள்ளுர உதறலும் – நம்மூர் மேல் மரியாதையும் வருவது இயற்கை
பத்திரிகைகளின் முக்கியத்துவம் அறிந்துள்ளது கம்யூனிச அரசு. அதனாலேயே அதன் பால் ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார். இணையத்தை அடக்கியாள பெரும் செலவு செய்கிறது. – இணையத்தில் போய் சீன மனித உரிமைகள் என்று தேடினால் இணையம் உடனே அறுந்துவிடுமாம் – என்னவோ போடா மாதவா!
என்னம்மா அங்க சத்தம்?
கம்யூனிசம் தவிற வேறெதுக்காகவும் மக்கள் கூட்டமாகச் சேறக்கூடாது. அது அரசாங்கத்திற்குச் சேராது. அது வாரியார் சொற்பொழிவாக இருந்தாலும் சரியே. ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை. இது எல்லாம் கம்யூனிசக் கடவுளின் அருள் வளம்.
தலாய்லாமா
தலாய்லாமா பற்றியும் இந்தக் கட்டுரையில் பேசுகிறார். சீனப் பார்வையில் தலாய்லாமா ஒரு நாடுடைப்பி – திபெத்திய மக்களை மிகவும் கொடுமைப்படுத்தியவர் – அட ராமா!
தலாய்லாமாவுக்கு நோபல் பரிசா.. எப்ப?? – சீன சென்சாரின் மகிமை – அட ராமா!
நவீனம்
டான்வேயின் கட்டுப்பாடு தளர்வு – செக்ஸ் கடைகளின் துவக்கம் – இடுங்கிய கண்களை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விரிவாக்கிக் கொள்ளுதல் போன்ற உதாரணங்களுடன் நவீனத்திற்கான சீன இளைஞர்களின் மாறுதல்களை விளக்குகிறார். “ஒரு பக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியம், மேலாதிக்கம் என்று விஷம் கக்குவார்கள். அதே சமயம் மெக்டானல்ட்ஸின் பிக் மேக் பர்கர்களை அள்ளி விழுங்குவார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் எதிலாவது இடம் கிடைக்காதா என்று ஆவலுடன் அலைவார்கள்” என்கிற ஆசிரியரின் வரிகளே நவீன மாறுதல்களை விளக்கப்போதுமானவை.
எல்லாம் கண்கட்டு வித்தை என்று இந்தக் கட்டுரையை முடிக்கிறார்!




Pingback: சீனா – விலகும் திரை II | கடைசி பெஞ்ச்
Pingback: சீனா – விலகும் திரை – III | கடைசி பெஞ்ச்
Pingback: சீனா – விலகும் திரை – IV (இறுதி) | கடைசி பெஞ்ச்