யுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க! வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா?” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது?” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.”
இமைக்கணம்
- ஆசிரியர்: ஜெயமோகன்
- இணையத்தில் வாசிக்க: இமைக்கணம் – 1
வெண்முரசு குருக்ஷேத்திரம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. போருக்கு முன் அழிவிற்குக் காரணமாகப் போகிறவர்களின் மனமயக்கத்தைத் தீர்ப்பதாகவும், இந்திய மெய்மையை மெய்யுசாவல் வழியாக அறியச் செய்வதாக அமைந்துள்ளது. இதைப் புரிந்து கொள்ளாமல் இதைப்பற்றி எழுதுவது சரியாக இருக்காது. வாசித்து வைத்திருக்கிறேன். பிற்காலத்தில் யாராவது இதைப் புரிந்து கொள்ளும் வழியை எளிமைப் படுத்திக் கூறுவார்களாயின் மறுவாசிப்பு செய்வேன். நீலம், சொல்வளர்காடு நாவல்கள் உடன் இந்நாவலையும் மறுவாசிப்பு பட்டியலில் வைக்கிறேன்.

கதையை மட்டும் திருப்பிப் பார்க்கிறேன். பெரும் கொலையாளியான யமன் தன் மனமயக்கம் தீர வெவ்வேறு உருவங்களில், வந்து இளைய யாதவரிடம் உரையாடி தெளிவு பெற விளைவதாக அமைந்துள்ளது. கர்ணன், தருமன், பீஷ்மர், சிகண்டி, வியாசர், திரெளபதி, அர்ஜூனன் என கதாமாந்தர் நிரை வந்து கிருஷ்ணனைச் சந்தித்து மெய்மை உசாவுகின்றனர். தவிர கிருஷ்ணன் சுகரைத் தேடிச் சென்று உரையாடுகிறார். மெய்மையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சீனிப்புட்டு போன்று விருந்தளிக்கும் இமைக்கணம்.
இதுவரை திரெளபதி பற்றியோ அர்ஜுனனைப் பற்றியோ வெண்முரசு கட்டி எழுப்பியருக்கும் பிம்பம் ஒருபுறம்.
திரெளபதி தன்னை கிருஷ்ணன் பாவையை வைத்து இளைய பருவத்தில் விளையாடிய பேதைப் பெண்ணாக வெளிப்படுத்திக் கொள்கிறாள். வைர மூக்குத்தியுடன் கரியமேனியளாக அவள் வெண்முரசில் அறிமுகமான இடத்திலிருந்து இன்றளவும் எவ்விடத்திலும் அவள் பேதைப் பெண்ணாகவோ எளிய காதலியாகவோ வந்ததில்லை. அவளுடைய காதலிலும் கூட நிமிர்வு இருப்பதாகவே மனத்தில் பிம்பத்தை வளர்த்து வந்திருக்கிறது.
அதே போன்றே அர்ஜுனனும்! இது வரை அவன் கலங்கி குழம்பியதாக வந்ததில்லை. அஸ்திரங்களைப் பெறும்போதும் அஞ்ஞாத வாசத்ததில் மாற்றுருவில் கர்ண துரியோதனர்களுடன் மோதும்போதும்.. எவ்விடமும் அவன் தன் சித்தம் கலங்காதவன். திடீரென ஆசிரியர் பிதாமகர்களுடன் போரிடும் தருணத்தை எண்ணி துயருருவதாக எண்ண மனம் சற்று தயங்குகிறது. அவன் இன்றளவும் ஒரு யோகியாகவே வருகிறான். தலைகீழாக பிம்பம் மாறுகிறது இங்கே. அப்படித்தான் என்றால் அப்படித்தான்!
செந்நா வேங்கை எழுதிக்கொண்டிருக்கிறார் ஆசிரியர். அதற்கு முன் ஒரு இடைவெளி தேவைப்படுகிறது. திரும்ப வருகிறேன்.
பார்க்க –
இமைக்கணம் – வெண்முரசின் கனி
