எழுதழல் | ஜெயமோகன்

ஆனால் அவன் கேட்ட சொற்கள் தெளிவாக ஒலித்தன. “நீங்கள் யார்? மூதாதையரா? இருளுலத்து தெய்வங்களா?”

இது எந்த பொழுது? இப்போது மண்ணிலெழுபவர் எவர்? ஒரு குழந்தை இரண்டடி எடுத்து அவனருகே வந்தது. முதிய குரலில் “இது பொழுது மயங்கும் வேளை, மைந்தா” என்றது. நடுங்கி கால் மடிந்து சதானீகன் தரையில் விழுந்தான். இரு கைகளையும் தரையில் ஊன்றி குழல் கற்றைகள் தொங்கி ஆட கண்மூடி அமர்ந்தான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது, அருவி பொழியும் மரக்கிளை போல.

எழுதழல் – 73 குருதிவிதை – 4

வனவாசத்தையும் முக ஒளிப்பு காலத்தையும் முடிந்து, அடுத்த பருவத்திற்கு முன்னகர்ந்துள்ளது வெண்முரசு. நிறைய பின்னடைவுகளைப் பாண்டவர்கள் சந்தித்துள்ளனர். நானும் அப்படியே. வெண்முரசு வாசிப்பில் நிறைய பின்னடைவு, சில பல காரணங்களால்.

வெண்முரசு turbo modeக்குச் சென்றிருக்கிறது. இதற்கு இமாலய உழைப்பினைப் போடுபவருக்கு பாணாசுரனின் சக்தியும், இளைய யாதவனின் மதியூகமும் வாக்கக் கடவது.

எழுதழல்
ஆசிரியர்: ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க – எழுதழல்

அபிமன்யூ:

அபிமன்யூவை அறிமுகப் படுத்துகிறார் ஜெயமோகன். குதிரைப் பாய்ச்சலில் பயணிக்கிறது எழுதழல். சுபகை, கணிகர், முண்டன் போன்ற வெண்முரசின் புனைவுக் கதாமாந்தர் வரிசையில் பிரலம்பன் சேர்கிறான். அபிமன்யூவிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் இடங்களை புன்னகையுடனும், ‘களுக்’ என்ற சிரிப்புடனும் கடக்கலாம்.. எனக்கு என்னவோ, ஜெயமோகன் தன்னைத்தானே மகாபாரத கௌரவ, பாண்டவ, யாதவர்களுடன் பழக விரும்பி, இப்படி மாற்றுரு கொண்டு கதையில் கதாபாத்திரங்களாக மாற்றிக் கொள்கிறார் எனத் தோன்றுகிறது.

அபிமன்யூ “நான் அரசநடையை பழகவேண்டுமென விழைந்திருக்கிறேன். மூத்த தந்தை துரியோதனர் அவைபுகுவதே பெரிய நாடகக் காட்சிபோலிருக்கும்” என்றான்.

பிரலம்பன் “கற்கவேண்டியதுதானே?” என்றான். “கற்றேன். மூத்த தந்தை யுதிஷ்டிரர் அவைபுகுவதைப் பார்த்தால் அது அக்கணமே மறந்துவிடும்…” என்றான் அபிமன்யூ. “கழுமேடைக்கு இறைவேண்டுதலை முணுமுணுத்தபடி ஏறுபவர் போலிருப்பார்.” பிரலம்பன் சிரிப்பை அடக்கமுயன்று விக்கினான். சுபூதர் திரும்பிப் பார்த்தார். அபிமன்யூ “சிரிக்கக்கூடாது. நாம் அவரை ஏளனம் செய்வதாக அவர் எண்ணிக்கொள்ளக்கூடும்” என்றான். சுபூதர் செம்மொழியில் “நான் என்னை ஏளனம் செய்வதை வரவேற்கிறேன், இளவரசே” என்றார். பிரலம்பன் திடுக்கிட அபிமன்யூ “ஆ! உங்களுக்கு செம்மொழி தெரிந்திருக்கிறது. நல்லவேளை, உங்களைப்பற்றிய உண்மையான கருத்தைச் சொல்ல நாவெடுத்தேன்” என்றான்.

எழுதழல் – 20

பல ஆளுமைகள் உள்ளே உறங்குபவனாக வளம் வருகிறான் அபிமன்யூ. விளையாட்டுப் பிள்ளையாக கௌரவர்களுடன் களித்திடுகிறான். உத்தரையுடன் ஒட்ட முடியாமல் தவிக்கிறான், இளைய யாதவருக்காக பாணருடன் போரிடுகிறான். துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு என்று நடந்து கொள்கிறான். அப்படியே தானே அவனுக்கு முடிவும் வந்து சேரப் போகிறது. இவனுடைய உள்ளமைந்த குணத்தையும், வெளியே காட்டும் முகத்தையும், உத்தரையுடன் இவனது உறவையும் நாமே விரித்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெருங்கொலைகாரனாகப் போகிறவன், ஏன் பதறுகிறான். உத்தரை அர்ஜுனன் பெயரைச் சொன்னதும் விலக முற்படுகிறான்.. அசைபோட்டவாறே நகரலாம்

Krishna against Banasura

உபப்பிலாவ்யம்:

விராட அரசின் உபப்பிலாவ்ய நகரில் பாண்டவர்கள் தங்கிக் கொள்கின்றனர். அரசியல் முடிச்சுகள் மேலும் மேலும் என எழுந்து வருகின்றன. தவம் விட்டு எழுந்த இளைய யாதவனின் விருப்பப் படி அபிமன்யூ திருமணம் நடக்க இருக்கிறது. அரசர்கள் அணிதிரள்கின்றனர். அவர்களைத் தத்தம் அணிகளுக்கு இழுக்க இரு தரப்பும் முயல்கின்றனர். பாண்டவர்களுக்குத் தோல்விமேல் தோல்வி.

தேவைக்கு குறைந்த சொற்களும் தேவைக்கு மிகுந்த சொற்களும் சூது கரந்தவை -கருணர்
எழுதழல் – 25

 

உபபாண்டவர்கள், உபகௌரவர்கள்

சதானீகன் சர்வதன், லட்சுமணன் என்று அடுத்த தலைமுறை எழுந்து வருகிறது. பீஷ்மர் மேலும் மேலும் வயசாளி ஆகிக்கொண்டே போகிறார். அனேகமாக போர் தொடங்கும் முன்னர் கூன் விழுந்து கண் தெரியாமல் உள்ள முதியவராகிவிடுவார் போல.

துரியோதனன்:

ஜெயமோகனின் துரியோதனன் என்று முன்னரே ஒரு ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதில் கூறியது போலவே, மக்களிடம் கனிவாகவும், உபபாண்டவர்களுக்குத் தந்தையாகவும், இந்திரப் பிரஸ்த நகரை நல்லபடியாக கவனிப்பது போலவும், பலராமர் மேல் குருபக்தி கொண்டவனாகவும் மிளிர்கிறான். அப்படித்தான் இருக்க முடியும். தோற்றவனுக்காகப் பேசுவதே இலக்கியத்தின் கடன். என்றாலும், துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தில் அவமதிக்கப் படும் போதும், திரௌபதியைத் துகிலுரிய ஆணையிடும்போதும், அந்த நிகழ்வுக்கான ஒரு முகத்தை அழுத்தமாகப் பதியவில்லையோ என்று தோன்றுகிறது. இவ்வளவு கன்னியமாக வரும் வெண்முரசு துரியோதனன் திடீரென கலிவடிவனாக மாறி, ‘வாடி, என் தொடை மீது வந்து உட்கார்’ என சொல்வதற்கு வலுவான நியாயத்தைத் தராமல் போவதாக ஒரு பிரம்மை என்னை வாட்டுகிறது.

எழுதழல் நாவலில், இளைய யாதவனின் மகன் சாம்பன் தன் பெண்ணைக் கடத்திச் செல்வதும், குரு பலராமர் கேட்டுக் கொண்டார் என்பதற்காக தன் சத்ரிய கட்டமைப்பில் இருந்து இறங்கி திருமணத்தை நடத்துகிறான். இளைய யாதவர் ஆதரவைப் பெற முன்னரே சென்றாலும், அதில் யாதவரின் சூழ்ச்சியில் சிக்கி வலுவற்ற யாதவர் ‘ஆர்மி’யை மட்டும் பெற்றுத் திரும்புகிறான், கிருஷ்ணனை அர்ஜுனனின் சாரதியாக்கி சூழ்ச்சி துரியனை சிக்கவைத்துள்ளது.

Krishna meets Arjuna and duryodana - picture (c) boloji dot com

மதுராவும் துவாரகையும்

ஓங்கி எழுந்த துவாரகை வீழ்ச்சியை சந்திக்கிறது. யாதவ குடித்தலைவர்கள் இளைய யாதவனைப் புறக்கணித்து மதுராவில் குவிகின்றனர். சிறுபிள்ளைகளைக் கொலை செய்து பழி கொண்ட மதுரா நகரத்தில், அந்த ஆன்மாக்கள் பழி தேடி அலைவதாக வரும் காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தும்.

சத்தியபாமா, சியமந்தகத் தகறாறு புகழ் குருதவர்மன், அக்ரூரர், பலராமர், அவர் மனைவி ரேவதி என அனைவரும் மதுராவை கௌரவ கூடாரமாக மாற்றுகின்றனர். துவாரகையைப் பற்றி எழுதழல் சொல்வது விஷ்ணுபுரம் நாவலின் இறுதிபாகத்தின் தொடக்கம. போன்றுள்ளதை நாம் உணர முடிகிறது.

தரிசனம்

kunti deviஇந்தப் பதிவை நேற்று இரவே (8 ஏப்) எழுதிவிட்டேன். ஆனால் காலையில் அலுவலகம் கிளம்பிய போது அடுத்தடுத்து தேவகியும் குந்தியும் வந்து மனதைக் கொந்தளிக்க வைத்துக்கொண்டே இருந்தனர்.

தன் மைந்தர்கள் குலப்பழி கொள்ளலாகாது; இளைய யாதவனுக்கு எதிராக ஆயுதம் ஏந்தலாகாது என உறுதி வாங்கிக் கொள்கிறாள் தேவகி. அவளிடம் கோபப்பட்டு கானகம் ஏகிறார் பலராமர்.

இந்திரப் பிரஸ்தம் நுழையும் குந்தி, இந்த போர் ஏற்பாடெல்லாம் பாண்டவ மைந்தர்களுக்கும் அவர்கள் கொடி வழியினருக்கும்தான் என்று பார்க்கவியிடம் தன்னை நியாயப்படுத்துகிறாள். அதில் இருக்கும் இடரை உணர்ந்து, நாடோ முடியோ இல்லாது சத்ரியராக வாழ்வதை விட இறப்பே மேல் என்கிறாள். அமைதியாக அவள் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இரு தாய் மனங்களையும் எண்ணிப் பார்க்கையில் பார்க்கவி மட்டுமல்ல வாசகனும் பதைத்துப் போய் இருக்கிறான்.

இன்னொரு நூல் அறிமுத்தில் சந்திப்போம் நண்பர்களே!

1 thought on “எழுதழல் | ஜெயமோகன்”

  1. Pingback: குருதிச்சாரல் | ஜெயமோகன் – கடைசி பெஞ்ச்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top