“அன்னைமடி நோக்கி தீச்சொல்லிட்ட தெய்வம் எது? அந்த தெய்வத்தின் முகத்தில் உமிழ்கிறேன்” என்று கூவினாள். தன் வயிற்றை ஓங்கி அறைந்தபடி “இதோ உள்ளது என் வயிறு. இம்மண்ணில் கருவறைகொண்டு பிறந்தவள் என்பதனாலேயே பெற்றுக்குவிக்க வேண்டியவள் நான். அனைத்தையும் மறலி கொண்டுசென்றாலும் சரி என் வயிறு ஒழியும்வரை பெற்றிடுவேன்” என்றாள்.
கிராதம்
ஆசிரியர் – ஜெயமோகன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம், சென்னை.
இணையத்தில் படிக்க – நூல் பன்னிரண்டு – கிராதம் – 1
வெண்முரசு வரிசையின் 12ஆவது நாவல் கிராதம். ஆயுதங்களையும், மெய்மையையும் பெற அர்ஜுனன் செய்யும் கடினமான பயணங்களை விவரிக்கிறது இந்த நூல்.
பயணம் செய்வதற்கு பயந்தவன் அல்ல அர்ஜுனன். ஏற்கனவே காண்டீபம் நாவலில், தற்போதைய வடகிழக்கு இந்தியாவைச் சுற்றி உலூபியையும், சித்ராங்கதையையும் மணந்தவன் இவன். இந்தப் பயணத்திற்கான காரணம், கொஞ்சம் காரமானது. சொந்தப் பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்பட்டு மன நலம் பாதிக்கப்பட்டு இருந்த துவாரகை அரசன் கிருஷ்ணனுடனான தனது “ஒத்தைக்கொத்தை” போரில் தோற்கிறான் அர்ஜுனன்.
தோல்வி என்பதல்ல, ஆனால் கிருஷ்ணனிடத்தில் அவன் கண்ட வெறுப்பு, எக்காளம் அவனை துவள வைத்துவிடுகிறது. அவர் முன் எதிர் நிற்க தன்னைத் தயார் செய்யும் பொருட்டு ஒவ்வொரு திசைத் தேவர்களிடமும் சென்று ஆயுதங்களையும், மெய்மையையும் பெற முயல்கிறான்.
நாவல் முழுதும் அர்ஜுனனைப் பற்றிப் பேசுகிறது. காண்டீபம் நாவலில் பயணம் செய்த அர்ஜுனன் அல்ல இவன். காதல், காமம், நிலம் என்று பற்றுக்களைக் கடந்த பின்னர் செய்யும் பயணம் இது. மெய்மையின் பயணம், அருளைப் பெற போராடும் பயணம்.
இந்தக் கதை ஒரு நான்கு பிரயாணிகளால் நமக்குச் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கான மெய்மை வழியைத் தேடிச் செல்கின்றனர். சந்தர்ப்ப வசத்தால் ஒன்றாக இணைகின்றனர். நாவலின் தொடக்கத்தில் வரும் கிராத முனிவரின் அறிமுகம், பட்டாசு. இந்தப் பிரயாணிகளின் பயணம் நீண்டு கொண்டே செல்கிறது, அவர்களின் உரையாடலில் தெரிக்கும் நகைச்சுவை, சீண்டல், தத்துவத்துடன் சேர்த்து!
அர்ஜுனனின் பயணங்கள், பிளாஷ்பேக்குகளாகவோ, சூதர் பாடல்களாகவோ தொடர்ந்து சொல்லப்படுகிறது. முதலிலிருந்து இறுதி வரை (அடிமுடி!!) கிராத சிவனைச் சுற்றி சுற்றி வருகிறது கதை. இந்த நான்கு பிரயாணிகள் – ஜைமினி, சண்டன், வைசம்பாயணன் மற்றும் இவர்களுடன் இறுதியில் இணைந்து கொண்ட “மகாசூதக்குட்டி” உக்ரன், ஆகியோர் இந்தக் கதையை தத்துவ இழைகள் கொண்டு நெய்து கொண்டு முன்னேறுகிறார்கள்.
அர்ஜுனன் ஒவ்வொரு திசைக்கும் அதிபதிகளை வெல்ல விரும்பி ஒவ்வொரு திசைக்கும் செல்கிறான். வடக்கே குபேரன், தெற்கே யமன், மேற்கே வருணன், கிழக்கே இந்திரன் என்று அவன் செய்யும் பயணங்கள் நீண்டவை. திசைத் தேவர்களின் இருப்பிடங்களுக்கான வருணனைகளைப் படிக்கும் நாம், கனவுலகில் மிதந்து கொண்டே வருகிறோம். குளிரும் கின்னர பூமி, வேட்கை வருத்தும் இறந்த கடல், கனவுலக இந்திர பூமி, பதைபதைக்க வைக்கும் யம உலகம் என்று ஜெயமோகனின் புனைவு ஜொலிக்கிறது.
குபேரனுடனான அர்ஜுனனின் சந்திப்பு, வாசகருக்கு சுவையான பக்கோடா மாதிரி! காலை ரயிலில் படிக்கையில் நான் சிரிப்பதைப் பார்த்து, பிறர் பயந்திருக்கக் கூடும்.
இந்திரனுடனான சந்திப்பு அழுத்தமானது. அந்த சந்திப்பிற்காக இந்திரகீலம் செல்லும் அர்ஜுனனின் பயணம் கனவாக உணரக் கூடியது.

ஏதேனும் ஒரு சமயத்தில் பிள்ளை தந்தையை மறுத்து கடந்து சென்றுதானே ஆகவேண்டும். அந்தத் தருணம் இது. இந்திரனின் தவிப்பு, அதைத் தவிர்க்க முயலும் பாலியின் சினம், அனைத்தையும் எதிர்த்து நிற்கும் அர்ஜுனனின் பக்குவம் – இந்தப் பகுதி இனிமையானது.
அனைத்துத் திசைகளிலிருந்தும் ஆயுதங்களையும் மெய்மையையும் வென்றாலும், கின்னர பூமியில் அவர்களின் தெய்வத்துன் போரிட முயன்று தோற்றுப் போகிறான் அர்ஜுனன். பின்னர் தெரிகிறது, அது நாராயண வேதத்துடன் வந்து எதிர் நின்ற கிருஷ்ணன் என்று. இந்த ஆயுதங்கள் போதாது என்று, பாசுபதத்தைப் பெற அவனைப் பணிக்கிறார் கின்னரஜன்ய பூசாரிக் கிழவர்.

கைலாயம் சென்று சிவனுடன், யாரென்று அறியாமல் போரிட்டு, பின்னர் பணிகிறான் அர்ஜுனன். கைலாயப் புனைவு வெகு சுவையானது. வாசிக்கும் வாசகனுக்கு வேட்டை. காளனுக்கும் (சிவன்), காளிக்கும் (பார்வதி) உள்ள காதலையும், ஊடலையும் குழைவென காட்சிப் படுத்தும் விதம் இருக்கிறதே…. அதுதாங்க கடவுள்!
மத்தபடி, இதில் உள்ள தத்துவார்த்தங்களை அறிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானமில்லை. அதற்காக பிரயத்தனப் படவும் இல்லை. எதிர்த்துக் கேள்வி கேட்காதவனை தத்துவம் அண்டாது என்று வருத்தப்படுகிறார் ஜெயமோகன். அது அவர் பாடு!
