ஹோண்டா நிறுவனம் 110 சி.சி திறன் கொண்ட நியூ ஏவியேட்டர் ஸ்கூட்டரை நேற்று (26th nov) அறிமுகப்படுத்தியது.

சென்னையில் நேற்று இந்த புதிய ஸ்கூட்டரை ஹோன்டா துணைத் தலைவர் அனுபம் மொஹிண்ட்ரூ அறிமுகப்படுத்தினார்.
இந்த புதிய ஸ்கூட்டர், ஏற்கனவே உள்ள ஏவியேட்டரைக் காட்டிலும் 15 விழுக்காடு கூடுதல் செயல் திறன் கொண்டது. அத்துடன் பெட்ரோலும் குறைவாக செலவாகும்.
இந்த வகை ஸ்கூட்டரில் நியூ ஏவியேட்டர் ஸ்டாண்டர்ட் மற்றும் நியூ ஏவியேட்டர் டீலக்ஸ் என இரண்டு ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ.43,938, மற்றும் ரூ. 48,938 ஆகும். இவை ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்.
இதில் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், முன்புற டிஸ்க் பிரேக், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்டி, டஃப் அப் டியூப் ,கோம்பி-பிரேக் சிஸ்டம், பராமரிப்பு தேவைப்படாத பேட்டரி, விஸ்கோஸ் ஏர் பில்டர் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இது அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்தப்பட உள்ள பாரத்-3 சுற்றுச் சூழல் விதிமுறைக்கேற்ப சான்றிதழ் பெற்ற வாகனமாகும்.
இந்நிறுவனம் சென்ற ஆண்டில் 10.7 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 18 விழுக்காடு அதிகம். இந்த நிதி ஆண்டில் 12.5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட நியூ ஏவியேட்டரின் வரவு உதவும் என்று மொஹிண்ட்ரூ தெரிவித்தார்.
ஹோண்டா நிறுவனம் விரைவிலேயே 100 சி.சி திறன் கொண்ட மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மோட்டார் பைக், புது தில்லியில் நடைபெற உள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெறும். இதற்காக ரூ. 100 கோடி கூடுதலாக முதலீடு செய்ய உள்ளதாகவும் அனுபம் மொஹிண்ட்ரூ தெரிவித்தார்.
news: http://tamil.webdunia.com/newsworld/finance/news/0911/27/1091127023_1.htm
